காணி வரைபடங்கள் இணையத்தளத்தில்: வெளியானது அறிவிப்பு

டிஜிட்டல் பொது சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, ஆகஸ்ட் முதலாம் திகதி அதாவது இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நிகழ்வின் போது, நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக நேற்றைய தினம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள், திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக இணையவழி கட்டணம் செலுத்துவதன் மூலம் காணி அளவீட்டு வரைபடங்களை பெறமுடியும்.
காணி தகவல் தரவுத்தளம் காணிப் பதிவுத் திணைக்களத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது காணி தொடர்பான தரவுகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.
சுமார் 2.4 மில்லியன் நில அளவை வரைபடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, காணி உரிமைச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் நில அளவை வரைபடங்களும் வழங்கப்படும் எனவும் இது காணி தகவல் சேவைகளை நெறிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.