News

பெரிய வெங்காயம் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்

உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை வாங்குவதற்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கவும், அரசாங்கத்தினால், பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது மற்றும் உத்தரவாதமான விற்பனை விலையை நிர்ணயிப்பது தொடர்பாக உணவு பாதுகாப்பு குழுவிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கவும் விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

விவசாயம் மற்றும் கால்நடை துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் விவசாயிகளுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் உள்ள கோவிஜன மந்திராயத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கூட்டத்தில், பெரிய வெங்காய விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளுக்கு நியாயமான விலை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூ. 100 வரி விதிக்க வேண்டும் என்று கோரினர்.

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை வாங்குவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் தேசிய உணவூ ஊக்குவிப்புச் சபை விவாதித்தது.

சுமார் இரண்டாயிரம் (2,000) ஹெக்டேர் நிலத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளதாக டி.ஆர். காஞ்சனா தெரிவித்தார். இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பிறகு வெங்காய அறுவடை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், எனவே, செப்டம்பர் இறுதிக்குள் உள்ளூர் வெங்காய அறுவடையில் எழுபத்தைந்து சதவீதம் (75%) சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஏக்கர் வெங்காய சாகுபடியில் 8,000 முதல் 16,000 கிலோகிராம் வரை அறுவடை செய்ய முடியும் என்றும், சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது ரூ. 90 ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வெங்காய உற்பத்தி நாட்டின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் சுமார் ரூ. 25,000 மில்லியன் மதிப்புள்ள வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button