அதிகரித்து வரும் வீதி விபத்துகள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வீதி விபத்துக்களால் இடம்பெறும் அவலநிலை தொடர்பில் வடமாகாண நீதி,சமாதான நல்லிணக்க பணியகம் தனது அறிக்கையில் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களின் அவலநிலை தீர்ந்தபாடில்லை.
தொடர் கதையாக சொத்திழப்புக்களும், உயிரிழப்புக்களும், உரிமையிழப்புக்களும் நடந்து கொண்டேயிருக்கின்றன.
கொஞ்சம் கொஞ்சமாய் மெல்ல அழியும் இனமாய் மாறிக்கொண்டிருக்கின்றோம். இன வன்முறையால் கொன்றொழிக்கப்பட்டோம். எஞ்சியதில் கொரோனாவிலும், சுனாமியிலும் பறிகொடுத்தோம் மீதியை இன்று வீதி விபத்துகளில் இழந்துகொண்டிருக்கிறோம். யாரும் கண்டபாடில்லை.
அதிகரித்துவரும் வீதி விபத்துகளும் அச்சமூட்டும் கொலைகளும் மலிந்துகிடக்கும் இவ்வேளையில் வடமாகாணத்தில் பணியாற்றும் நீதி சமாதான நல்லிணக்க பணியகம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்க விரும்புகிறது.
மிகவும் சன நெருக்கடியான, முக்கியமான சந்திகளில் சமிக்கை விளக்குகளை பொருத்த பொறுப்பு வாய்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் தலைமைகள் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்.
அத்தோடு பாரவூர்தி உரிமையாளர் சங்கங்கள் தனியார் மற்றும் அரச போக்குவரத்து தொழிற்சங்கங்கள். அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன தங்கள் அமைப்புக்களில் பணியாற்றக்கூடிய சாரதிகளுக்கான தொடர் உளநல ஆலோசனை வழிகாட்டல்களை முதன்மைப்படுத்தி அவர்களின் உளநல மேம்பாட்டை உறுதிப்படுத்தி பணியாற்றக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க உடனடியாக முன்வர வேண்டும்.
அது தொடர்பான சில திட்டமிடப்பட்ட ஆக்கபூர்வமாக செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த இப்படியான அமைப்புக்கள் முன்வருவது காலத்தின் கட்டாயமானதாகும்.
இதையும் தாண்டி சமூக பொது அமைப்புக்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் உட்பட காத்திரமான செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து செயற்படுத்த வலுவூட்ட அரச உயர் அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக முன்வைக்கின்றோம்.
அத்தோடு இந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் தொழில் புரியும் சாரதிகளுக்கான உளவள ஆலோசனைகள் தொடர்பான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நீதி சமாதான நல்லிணக்க பணியகம் தயாராக இருக்கிறது.
அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதிதாக பதவி பொறுப்புக்களை ஏற்றிருக்கக்கூடிய பிரதேச சபை நிர்வாகம் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் உலாவித்திரியும் கால்நடைகளினை கட்டுப்படுத்த காத்திரமான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது அவர்களது கடமை என்பதை உணர்ந்து உடனடியாக முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் வினையமாக முன்வைக்கிறது என்றுள்ளது.