இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தடைகள் நீக்கம்

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு எதிராக நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், செவித்திறன் அல்லது பேச்சு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பகுதி பார்வைத் திறன் கொண்டவர்கள் புதிய விதிமுறைகளின் கீழ் தற்போது சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
நாட்டில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை உறுதி செய்வதற்காக பல ஆண்டுகளாக நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சான்றிதழ் மற்றும் உடல் நிலைகளுக்கு ஏற்ற வாகன மாற்றங்களின் பற்றாக்குறை முக்கிய சவாலாக இருந்தது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள் பாதுகாப்பான வாகன ஓட்டும் திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த புதிய முடிவு அவர்களின் வாகனம் ஓட்டுவதற்கான உரிமை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்கின்றது.
போக்குவரத்து திணைக்களம், போக்குவரத்து அமைச்சு மற்றும் தொடர்புடைய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்கள் இணைந்து, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கு தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த சில்வா, போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவில் அங்கத்தவராக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.