News

மின்சார சபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் : வெளியான அறிவிப்பு

புதிய மின்சாரச் சட்டத்தின்படி, நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 இலங்கை மின்சார சபையின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியால் (Kumara Jayakody) வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின்படி, மின்சார சபையின் 4 நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து ஊழியர்களையும் அந்த நான்கு நிறுவனங்களுடன் இணைத்து கடிதங்கள் விநியோகிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனங்களில் சேரத் தேர்வு செய்யாத ஊழியர்கள் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற உரிமை பெறுவார்கள் என்று வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பு இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும், ஊழியர் குறித்த படிவத்தை நிரப்பி தனது விண்ணப்பப் படிவத்தின் மூலம் இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இழப்பீடு செலுத்தும் முறைகளையும் வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியர்கள் கடந்த சேவைக் காலத்தில் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் இரண்டு மாத சம்பளத்தையும், மீதமுள்ள சேவைக் காலத்தில் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒன்றரை மாத சம்பளத்தையும் பெற உரிமை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியர்கள் கடந்த சேவைக் காலத்தில் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 05 மாத சம்பளத்தைப் பெற உரிமை பெறுவார்கள் என்றும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு எந்த கட்டணமும் செலுத்தப்படாது என்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, தானாக முன்வந்து ஓய்வு பெறும் ஊழியருக்கான இழப்பீடு குறைந்தபட்சம் 900,000 ரூபாவும், அதிகபட்சம் 5 மில்லியன் ரூபா என்ற வரம்புக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த ஓய்வூதியம் தொடர்பான இறுதி பரிந்துரைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button