இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு..?
இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளால் ஏற்படும் தொல்லைகளை குறைக்கும் வகையில் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையின் பிரகாரம் முதற்கட்டமாக 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (11) பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்றது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று பங்குபற்றியுள்ளது.
இக்கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தற்போது நமது நாட்டின் குரங்குகள் தொகை 30 இலட்சத்தை நெருங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நாட்டில் பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்கும் முதன்மையானது. அதனால் அதன் தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் குரங்குகளால் அதிகளவான சேதங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, இலங்கையில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நோக்கும் போது, அதனை கட்டுப்படுத்த ஒரு நாடு முன்வந்தமை மகிழ்ச்சியளிக்கும் விடயம் என இக்கலந்துரையாடலில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.