ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்கும் யோசனை!
உலகளாவிய அரசியலில் யுத்த காலத்தில் ஜனநாயகத் தேர்தல்களை தவிர்ப்பது அல்லது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றபோதும் தேர்தல்கள் தவிர்க்கப்படுவது பொது விதியாக உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தேர்தல்களை நடத்தாமல் இன்றுள்ள ஜனாதிபதியை தொடர்ந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்படியே பதவியில் அமர்த்தி நாட்டினை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். என்ற கருத்து தற்போது சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல் தரப்புக்கள் மத்தியிலும் பேசப்பட தொடங்கிவிட்டது.
இந்தப் பின்னணியில் இலங்கையில் நடத்தப்படக் கூடிய தேர்தல்களும் அவற்றிற்கான வாய்ப்புகள் பற்றியும் பூர்வாங்கமாக அலசுவது அவசியமானது.
ஜனாதிபதியாக அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தில் எஞ்சிய காலப் பகுதியையே குறை நிரப்பிடு செய்கிறார். எனவே 2024 ஆம் ஆண்டு இறுதியுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. . எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான காலச் சூழலும், அரசியல், பொருளியல் இஸ்த்திரத்தன்மையும் இன்று இலங்கையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் நடக்கவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் மாகாண சபை தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ, ஜனாதிபதி தேர்தலோ இப்போதைக்கு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அரிதினும் அரிதாகவே உள்ளன.