அரிசி, சீனி, பருப்பு போன்றவற்றின் விலை உயரும் சாத்தியம்!
நாட்டில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்றவற்றின் விலைகள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடைவதனால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொள்கலன் போக்குவரத்து தொடர்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கொள்கலன் போக்குவரத்து நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 அடி நீளமான கொள்கலன் ஒன்றை போக்குவரத்து செய்ய 80000 ரூபா அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய துறைமுகங்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன் ஊடாக கொள்கலன் போக்குவரத்து தொடர்பில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி கொள்கலன்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் ரத்து காரணமாக இறக்குமதியானர்கள் இந்தக் கட்டணங்களை ஏற்க நேரிட்டுள்ளதாகவும் இதன் சுமை நுகர்வோரையே சென்றடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்றாடம் நுகரும் சீனி, அரிசி மற்றும் பருப்பு போன்ற பொருட்களின் விலைகளில் இந்த போக்குவரத்து கட்டணங்கள் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தாது வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்தமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ஜீ.எம். அபேசேகர தெரிவித்துள்ளார்.