நிறுத்தப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள் – காரணம் வெளியானது!
இலங்கைக்கு சொந்தமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையானது தனது விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
குறிப்பாக, நிதி சிக்கல் காரணமாக சிறிலங்கன் எயார்லைன்ஸின் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை சிறிலங்கன் எயார்லைன்ஸ் மறுத்துள்ளது.
குறித்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டமைக்கான காரணத்தையும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏ320 என்.இ.ஓ வகையை சேர்ந்த 5 விமானங்கள் தற்போது புதிய இயந்திரங்களை பொருத்துவதற்காக காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய தொழில்துறையில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறை மற்றும் இந்த விமானங்களுக்கான இயந்திர பழுதுபார்ப்புகளுக்கு நீண்ட காலம் எடுக்கின்றமையால் சேவையை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இயந்திர சீரமைப்பு தொடர்பில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உலகளாவிய இயந்திர பற்றாக்குறையே விமான சேவையின் நிறுத்தத்திற்கு காரணம் எனவும், நிதிப் பிரச்சனை எதுவும் இல்லை எனவும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.