பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நடைமுறை, ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
இதனால், இலங்கை GSP ப்ளஸ் வரிச் சலுகைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இந்த புதிய சட்டமூலம் குறித்து ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை பிரிவின் உதவி நிர்வாக இயக்குனர் பவ்லா பம்பலோனி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம், புதிய சட்டமூலம் தொடர்பில் அமெரிக்கா தனது எதிர்ப்பினை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ஊடாக வெளிப்படுத்தியுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மாற்றப்படாவிடின், முன்னுரிமை வர்த்தகம் மூலம் வர்த்தக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவிடம் பிரித்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சில பிரதிநிதிகளும் புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.