இலங்கையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி!
இலங்கையில், ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் அஸ்வசுமா நலத்திட்டம் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு 15,000 ரூபா உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த, நலத்திட்ட உதவித் திட்டத்திற்கு 4 சமூகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பிரிவுகள் இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, ஏழை மற்றும் மிகவும் ஏழ்மை என பெயரிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இடைநிலைப் பிரிவில் உள்ள குடும்ப அலகுக்கு, 31 டிசம்பர் 2023 வரை மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகையும் பாதிக்கப்படக்கூடிய என அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அலகுக்கு 2025 மார்ச் வரை மாதாந்தம் ரூ. 5,000 உம் வழங்கப்படும்.
மேலும் ஜூலை 1, 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு, ஏழைப் பிரிவின் கீழ் உள்ள ஒரு குடும்ப அலகுக்கு ரூ. 8,500 மற்றும் மிகவும் ஏழ்மையான பிரிவின் கீழ் வரும் குடும்ப அலகுக்கு 15,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் என வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.