News

எந்த கூட்டணியிலும் சுதந்திரக்கட்சி இணையாது! – மைத்திரி திட்டவட்டம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (24) ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற விசேட சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பொதுக் கூட்டணியை அமைப்பதற்குச் சகலரும் இணக்கம் தெரிவித்தனர் என்று லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று (25) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரக் கட்சி வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இனிவரும் காலங்களிலேயே தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். தற்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, நாம் கட்சியின் தனித்துவத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலேயே தீர்மானங்களை எடுப்போம். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மீதான விவாதத்தின் போது எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்கள், ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.

எந்த கூட்டணியிலும் சுதந்திரக்கட்சி இணையாது! - மைத்திரி திட்டவட்டம் | Srilanka Political Crisis Ranil Maithripala

ஊழல், மோசடி சட்டமூலம் உள்ளிட்ட ஏற்றுக்கொள்ளக் கூடிய மிக முக்கிய தீர்மானங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றுக்கு வாக்களிக்க முடியும்.

எனினும், ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் தொடர்பில் திருத்தங்களை முன்வைப்போம். இதேபோன்று புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எமது நிலைப்பாடு மற்றும் திருத்தங்களையும் முன்வைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button