ஐஎம்எப் உடன்படிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றம்
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 மாத கால நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை கடந்த மார்ச் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை தொடர்பான விவாதம் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தீர்மானத்தை சபை அனுமதிக்கின்றதா என கேட்டபோது, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வாக்கெடுப்பை நடத்துமாறு கோரினார்.
இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 95 மேலதிக வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவாக எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான அனுர பிரியதரஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் வாக்களித்த நிலையில் தீர்மானத்திற்கு எதிராக டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையிலான அணி, அனுரகுமார திஸாநாய்க்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஏ.எச்.ம்.பெளசி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
அத்துடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியன வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
குறித்த வாக்களிப்பில் மொ்ததமாக 79பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்