வட மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ஜோன் அமரதுங்க நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய ஜோன் அமரதுங்க, மே 7ஆம் திகதி வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
ஜனதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
தற்போதைய ஆளுநர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது நியமனம் பெற்றவர்கள்.
இந்நிலையில், பதவியேற்ற கையோடு ரணில் ஆளுநர் மாற்றங்களைச் செய்யவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான செந்தில் தொண்டமானை நியமிக்க நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கிலும் ஆளுநரை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண ஆளுநர் பதவியைப் பெறப் பலரும் முயற்சித்து வந்த நிலையில் நன்கு தமிழ் தெரிந்த சிங்கள இனத்தவரான ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்பது அறியமுடிந்துள்ளது.
இன்று இலண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெசாக் தினத்துக்கு முதல் நாள் நாடு திரும்பியதும் ஆளுநர் நியமனப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.