இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
நிதியியல் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் என ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையால் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கமுடியும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பொருளாதார நிலவரம் தொடர்பான ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டமானது நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருப்பதுடன், அதன்மூலம் பணவீக்கம் குறைந்த மட்டத்துக்குக் கொண்டுவரப்படும்.
நிதியியல் உறுதிப்பாடு என்பது வருமானத்தை அடிப்படையாகக்கொண்டதாகவே அமையும். ஏனெனில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட ‘வரி நீக்கம்’ என்ற கொள்கை ரீதியான தவறினால் நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியேற்பட்டது.
எனவே நிதியியல் உறுதிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்.
அடுத்தகட்டமாக தனியார் கடன்வழங்குநர்கள் மற்றும் உத்தியோகபூர்வக் கடன் வழங்குநர்கள் உள்ளடங்கலாக அனைத்துக் கடன்வழங்குநர்களுடனும் கலந்துரையாடி, கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான நம்பத்தகுந்த முயற்சியை இலங்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி அதற்குரிய முயற்சிகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், வெகுவிரைவில் அதனை முன்னிறுத்திய செயற்திட்டம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.