வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதற்கான விசேட பெக்கேஜ்
வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதற்கான விசேட பெக்கேஜ் ஒன்றை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விரைவில் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் மாத்திரம் தான் அவர்கள் இலங்கைக்கு வருவார்கள் என தெரிவித்த அமைச்சர், கடந்த வருடம் இந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறை சர்வதேச ரீதியில் நாட்டிற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
எந்தவொரு நாட்டு முதலீட்டாளர்களும் இந்நாட்டிற்கு வருகை தந்து, அச்சமின்றி வாழ்வதற்கு, சட்டத்தின் ஆட்சiயி முறையாகச் செயல்படுத்தி, முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா, சீனா, வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு, ஆதரவு, நிதிப் பயன்கள் மற்றும் ஊக்கத்தொகைகளைப் போன்று எமது நாட்டால் வழங்க முடியாத காரணத்தினால், முதலீடுகள் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு முதலீடுகளை விரைவாக ஈர்ப்பதற்கு, விசேட பெக்கேஜ் ஒன்றை ஜனாதிபதி விரைவில் நாட்டிற்கு அறிவிப்பார் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.