எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
தகவல் பரிமாற்றத்தின் முக்கிய செயலியாக இருந்துவரும், ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்தே, பரபரப்பான விசயங்களை செய்துவருகிறார். ‘இவர் கையில் மாட்டிக்கிட்டு இந்த டிவிட்டர் படாதபாடு படுகிறது’ என சாதாரண வாடிக்கையாளர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை புலம்பி தள்ளாத ஆட்களே இல்லை.
அந்தளவு பணியாட்கள் குறைப்பு, கட்டணம் செலுத்தினால் தான் ப்ளூ டிக் வசதி, செய்தியாளர்கள் கணக்குகள் முடக்கம், ட்விட்டரின் லோகோவாக சீம்ஸ் டாக், டிவிட்டரை மூடப்போவதாக ட்விட்டரிலேயே பதிவு, டிவிட்டரின் சிஇஒ பதவியிலிருந்து விலகப்போகிறேன் என பொறுப்பேற்றதிலிருந்தே ட்விட்டரை பரபரப்பாக வைத்திருக்கிறார், மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் கணிசமான பங்குகளை சந்தையில் விற்ற எலான் மஸ்க், அவரின் சொத்துமதிப்பில் பெரும்பகுதியை இழந்திருந்தார். இந்நிலையில் ட்விட்டரை லாபகரமான ஒரு செயலியாக மாற்றுவதில் மும்முரமாக வேலை பார்த்து வரும் மஸ்க், பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகம் செய்துவருகிறார்.
அந்தவகையில் ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற போதே, “ ட்விட்டர் 2.0 எல்லாம் கிடைக்கும் செயலி” என்பதை முன்மொழிந்தார். அதன்படி என்கிரிப்டட் மெசேஜ்கள், அதிக வார்த்தைகள் கொண்ட பெரிய ட்வீட், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ப்ளூ டிக் என்பதையெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மற்ற தகவல் பரிமாற்ற செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவை போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில், ட்விட்டரையும் களத்தில் இறக்கியுள்ளார், மஸ்க். புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக ட்வீட் செய்திருக்கும் அவர், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை, டிவிட்டரில் அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் மஸ்க், “உங்கள் த்ரெட் பகுதியில் இருக்கும் மெசேஜ்களுக்கு கூட, நீங்கள் என்கிரிப்ட் ரிப்ளை செய்யும் வசதியை, புதிய அப்டேட் ஏற்படுத்தித்தரும். அதுமட்டுமல்லாமல் எந்தவிதமான எமோஜி ரியாக்சனையும் உங்களால் செய்யமுடியும். மேலும் உங்களுடைய மொபைல் நம்பரை பகிராமலேயே ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி, உங்கள் கைகளுக்கே வந்து சேரும்” என்று தெரிவித்துள்ளார்.