வவுனியாவில் புகையிரதப் பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் புகையிரதப் பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் புகையிரதப் பாதை அமைக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வவுனியா மதவுவைத்தகுளத்தில் இருந்து ஏ9 வீதிக்குச் செல்வதற்காக மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையினை கடந்த 20 வருடங்களாக சுமார் 350 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறித்த புகையிரதக் கடவை ஊடாக கிராம மக்கள் செல்வதற்கு தடையேற்படுத்தும் முகமாக, புகையிரதப் பாதையினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, நிரந்தர பாதை புனரமைப்பு பொறுப்பதிகாரி டபிள்யு. குணசிங்க குறித்த இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடிய போதும் இதற்கான தீர்வு கிடைக்காத நிலையில், குறித்த புகையிரதப் பாதை அமைப்பதற்கான இயந்திரமும் தடுக்கப்பட்டநிலையில் மக்கள் புகையிரதப் பாதையில் அமர்ந்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.