ஏற்றுமதி வர்த்தகத்திற்கு தடையாகும் இலங்கை குரங்குகள்!
குரங்குகளின் சேட்டையால் ஏற்பட்ட சேதத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கித்துல் கைத்தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கித்துல் உற்பத்தியாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஹலியகொட மற்றும் இரத்தினபுரி ரத்கங்கை பிரதேசங்களில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று கித்துல் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
இதன்போது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கித்துல் உற்பத்தியாளர்கள், கித்துல் தொழில்துறையில் குரங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமைச்சரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தேன் எடுப்பதற்காக பூக்களை வெட்டினாலும் ஒரு நொடியில் அவற்றினை அழித்துவிட்டு, செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த அழிவை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கித்துல் உற்பத்தி எஹெலியகொட கித்துல் உற்பத்தித் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கித்துல் தேன், கித்துல் கருப்பட்டி மற்றும் கித்துல் கள் என்பன தற்போது அமெரிக்கா, டுபாய், சுவிட்சர்லாந்து மற்றும் வடகொரியா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது மொத்த கித்துல் தொழில் மூலம் நாட்டின் வருமானம் 50,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
குரங்குகளால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
”சீனாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையில் உள்ள குரங்குகளை தமது மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், சில சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆட்சேபனை காரணமாக, பணி ஆணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள சட்ட சிக்கல்களைத் தீர்த்து பணி உத்தரவு மீண்டும் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.