வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் நேற்றையதினம் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுநர்களே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள் நியமனம் நாளை இடம்பெறவுள்ளதுடன், மூன்று மாகாணங்களுக்கும் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஆளுநர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள பி.எஸ்.எம் சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற அதிகாரி அரச அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், சுங்க திணைக்கள பணிப்பாளர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் செந்தில் தொண்டமானுக்கு உறுதியாகியுள்ளதுடன், ஏனைய இருவர் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.