சீனாவுக்கான குரங்கு ஏற்றுமதி குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைக்க திகதியையும் கோரினார்.
அதன்படி, மனுவை வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன மற்றும் ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பேரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சோதனை நோக்கத்திற்காக சீனாவில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்நாட்டின் ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சட்டத்தின் மூலம் கடுமையான மிருகக் கொடுமைகள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், இது வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.
எனவே, சீனாவுக்கு வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும், வனவிலங்குகள் இயக்குநருக்கு உரிமம் வழங்குவதை தடுக்க உத்தரவிடுமாறும் உரிய மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.