NIC, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் இனி ஒரே இடத்தில்!
மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றுவதற்கு தேவையான சூழலை தயாரிப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்து ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கேற்ப இந்த வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 50 பிரதேச செயலக அலுவலகங்களில் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கமைவாக மூன்று நாட்களில் தமது கடவுச்சீட்டை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக அமைச்சரவை குழுவொன்றையும் நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.