இலங்கையின் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம்! எடுக்கப்படும் கடும் நடவடிக்கை
இலங்கையின் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது தொடர்பான பொது ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது போன்ற வேளையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்து, பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
“அத்தகைய தனிநபர்கள் மற்றும் குழுக்களை விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோருமாறு தான் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளை பெருமளவில் மீறும் வகையில் புதிய தொழிலாளர் சட்டத்தை அமைச்சகம் உருவாக்கி முடித்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதை அடுத்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.