சீன திட்டங்களை தாமதமாக்கும் இலங்கை அதிகாரிகள் …!
அந்நிய முதலீடுகளின் போது தங்களுக்கு கமிஷன் கிடைக்காத செயற்திட்டங்களை இலங்கை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகமே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குற்றச்சாட்டின் தன்மையைத் தீவிரப்படுத்துகின்றது.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளச் சீனாவின் முக்கிய நிறுவனங்கள் பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், அவற்றை இங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்த பின்னர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாகவும் சீனாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் அவ்வாறான செயற்திட்டங்களில் தமக்கு கமிஷன் கிடைக்காத காரணத்தினாலேயே குறித்த முதலீட்டுத் திட்டங்களை முதலீட்டுச் சபை அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாகவும் சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
அண்மைக்காலத்தில் சீனா ஹார்பர் நிறுவனம் இலங்கையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது. இதே நிறுவனம் தான் கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணங்களையும் மேற்கொண்டிருந்தது.
ஹுனான் இன்ப்ரஸ்டரக்சர் எனும் உள்கட்டுமான மேம்பாட்டு நிறுவனம் கொழும்பில் இலகு தொடருந்து செயற்திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது.
அதற்கு மேலதிகமாக சினோபார்ம் நிறுவனம் இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க விருப்பம் தெரிவித்திருந்தது.
இலங்கை அதிகாரிகள் உதாசீனம் செய்த காரணத்தினால் அது தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தன் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
இவ்வாறாக ஏராளமான சீன நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களையும் இலங்கை அதிகாரிகள் தமக்கு கமிஷன் கிடைக்காத காரணத்தினால் உதாசீனம் செய்து வருவதாகச் சீனாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.