வாகன இறக்குமதியை நிறுத்தவேண்டும் – அரசாங்கத்திற்கு ஆலோசனை..!
சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 5 வருடங்களுக்கு நிறுத்துமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே முன்னாள் அதிபர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நிதியமைச்சின் கீழ் உள்ள பல வரி ஒழுங்குமுறை சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
“மோட்டார் வாகனங்களுக்கான வரி பற்றி நான் பேச விரும்புகிறேன். இது சொகுசு வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பது பற்றியது. சொகுசு வாகனங்களின் இறக்குமதியை 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்துமாறு அரசிடம் நான் பரிந்துரைக்கிறேன்.
இந்த நாட்டுக்கு சொகுசு வாகனங்கள் தேவையில்லை. அதன்படி இந்த நாட்டின் பொருளாதாரதை சிக்கலின்றி முன்னெடுக்க இது உதவி புரியும்.
கையிருப்பில் போதுமான வாகனங்கள் உள்ளன.ஆகவே, சொகுசு வாகனங்கள் இல்லாமல், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை எடுத்து செல்வோம். ஏனென்றால், சொகுசு வாகனங்களுக்கு செல்லும் அந்நிய செலாவணி அதிகம்.” என தெரிவித்துள்ளார்.