News

ஒரே போட்டியில் பல சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்!

மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற Qualifier-2 ஆட்டத்தில் குஜராத் அணியின் சுப்மன் கில் அதிரடி சதமடித்தார். இதனால் குஜராத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது.

அந்த அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சுப்மன் கில் நேற்று விளாசிய அதிரடி சதம் மூலம் பல்வேறு சாதனைகளை உடைத்துள்ளார்.

அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் 49 பந்துகளில் சதம் அடித்தார். முடிவில் 60 பந்துகளில் 129 ஓட்டங்களை சுப்மன் கில் விளாசினார்.

இதில் 10 சிக்ஸர்களும், ஏழு பவுண்டரிகளும் அடங்கும். சுப்மன் கில்லின் இந்த இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகள் உடைக்கப்பட்டு இருக்கிறது.

மிக முக்கியமாக ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஓட்டங்கள் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக அப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷேவாக் 122 ஓட்டங்கள் அடித்தது சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் மேலும் ஷேன் வாட்சன் 117, விருத்திமான் சாஹா 115, முரளி விஜய் 113, ரஜத் பட்டிதார் 112 அடித்தும் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதேபோன்று பிளே ஆஃப் சுற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்திருக்கிறார்.

விரேந்திர ஷேவாக், சாஹா, கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இருந்தனர். இப்போது 10 சிக்ஸர்கள் அடித்து அந்த சாதனைகளை தாறுமாறாக உடைத்திருக்கிறார் சுப்மன் கில்.

இதேபோல ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் தற்போது 3ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 973 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 863 ஓட்டங்களும் எடுத்தனர். இப்போது சுப்மன் கில் நடப்பாண்டில் 851 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அதேபோல பிளே ஆஃப் சுற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. கடைசியாக விளையாடிய நான்கு ஐபிஎல் ஆட்டத்தில் சுப்மன் கில் மூன்று சதம் அடித்திருக்கிறார். மேலும் ஒரு சீசனில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, ஜோஸ் பட்லருக்கு பிறகு சுப்மன் கில் 3ஆவது இடம் பிடித்திருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button