பதவி பறிபோகும் நிலையில் அலி சப்ரி ரஹீம் – தீவிரமடையும் எதிர்ப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறு கோருவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பில், நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
நேற்றையதினம் மாலை நடைபெற்ற நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் சார்பில் கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்.
இதேவேளை, அனைத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று முன்தினம் (25) இரவு டுபாய் நோக்கி விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் (25) இரவு 8:50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
6 கோடி ரூபா பெறுமதியான, மூன்றரை கிலோ கிராம் தங்கத்தை, நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவரின் பயணப் பொதியில் இருந்து, 91 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார்.