News

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு: ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி 3.9 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

இது கடந்த ஆண்டு ஜூன்- ஜூலையில் இருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடைக் காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னேற்றங்கள் இருக்கின்றபோதும், சில மாவட்டங்களில் குறிப்பாகக் கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

பெருந்தோட்டத் துறையின், சமூகங்களுக்குள்ளும், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களிலும் தங்கியுள்ள குடும்பங்கள் மத்தியிலும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக உயர்ந்த அளவில் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

இதேவேளை 2022- 23இல் இரண்டு முக்கிய பயிர் பருவங்களில் அரிசி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி 4.1 மில்லியன் தொன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஐந்தாண்டு சராசரியை விட 14 சதவீதம் குறைவாகும், முக்கியமாக உரம் போதுமான அளவு வழங்கப்படாமை இதற்கான காரணமாகக் கூறலாம்.

எனினும் சிறு விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய உரங்கள், பலதரப்பு மற்றும் இருதரப்பு நன்கொடை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி என்பன உற்பத்தியில் குறிப்பிடத்தக்க நன்மைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அண்மையில் அறுவடை செய்யப்பட்ட 2022- 23 பெரும்போகப் பருவத்தில் உற்பத்தித்திறனின் 12வீத முன்னேற்றத்துக்கு இது காரணமாக இருந்தது என்றும் ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன குறிப்பிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button