5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற CSK
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
குஜராத் அணி சார்ப்பில் சாய் சுதர்சன் 96 ஓட்டங்களையும் சகா 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்தநிலையில், மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், மழை நின்றதை சரியாக நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டம் செய்ய தொடங்கியது.
ஆனால், டக்வத் லுவிஸ் முறைப்படி போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 5வது முறையாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.