எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை..!
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்கின் வணிக நடவடிக்கைகளை தொடர்ந்து எரிபொருள் விலைகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக எரிபொருளுக்கான நிலையான ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அரசாங்க தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.
மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கும் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சினோபெக் நிறுவனத்திற்கு நாட்டில் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது, அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்களே நாட்டில் எரிபொருள் விநியோகஸ்தர்களாக காணப்படுகின்றன.
மேலும், எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான கியூஆர் குறியீட்டு முறையிலிருந்தும் அரசாங்கம் விரைவில் விலகும் என்றும் அரச தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.