300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்..!
300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள புதிய வரி அறிமுகம், வட்டி வீதங்களை உயர்த்துதல் என்பவற்றுடன் இறக்குமதி கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதன் விளைவாக 2022 ஏப்ரல் மாதத்தில் 24.9 மில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு பணவனுப்பல், இவ்வருடத்தில் 45.4 மில்லியன் டொலராக அதிகரித்தது. அத்துடன், பணவீக்கமும் 70 சதவீதத்திலிருந்து 25.5 சதவீதம் வரை குறைந்தது.
ரூபாவின் பெறுமதியும் 20 சதவீதத்தினால் அதிகரித்தது. உத்தியோகபூர்வ ஒதுக்கம் 3 பில்லியன் வரை உயர்வடைந்தது.
இதன் பிரதிபலன்களை மக்கள் அனுபவித்து வரும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு, தமது உற்பத்தியை முன்னெடுக்க தேவையான மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.