News

மகாவலி காணி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு – ரணில் விக்ரமசிங்க..!

மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த கலந்துரையாடலின் போது மீளாய்வு செய்யப்பட்டது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (TRC)பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல், அதன் தொழிநுட்ப மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் மற்றும் இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை ஸ்தாபித்தல் மற்றும் அது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பூர்த்தி செய்து, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் அதிபர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல், மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதிபர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கம், மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண ஒம்புட்ஸ்மன் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபரின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் மற்றும் தொடர்புடைய நிறுவன பிரதானிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிழக்கு மற்றும் வடமாகாண காணி ஆணையாளர்கள்ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button