முல்லைத்தீவு வைத்தியசாலை மூடப்படும் அபாயம்!
விசேட வைத்தியர்கள் உட்பட பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் முல்லைத்தீவு வைத்தியசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் சுகாதாரத் துறையில் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நியமனம் செய்யப்பட்ட சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் ஐம்பது பேர் நியமனக் கடிதங்களை ஏற்றும் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு ஆளாவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மருத்துவ சேவையில் இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54,000 ரூபா எனவும் அதற்கமைய அவரின் நாளாந்த சம்பளம் 2000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். இந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு வீடு கட்டி திருமணம் செய்வது கனவாக உள்ளதனால் இன்று பல வைத்தியர்கள் மருத்துவ துறையில் நிலைத்து நிற்கும் நம்பிக்கை இல்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.
விசேட வைத்தியர்கள் உட்பட பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், கந்தளாய், தெஹியத்தகண்டிய போன்ற வைத்தியசாலைகளின் திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு வைத்தியசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
மதிப்பைக் கணக்கிட்டு, மருத்துவர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும், சுகாதாரத் துறையைப் பாதுகாக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வரிக் கொள்கை மற்றும் பொருளாதார அழுத்தம் காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் துறை அறிஞர்கள் வீடுகளை விற்று வெளிநாடு செல்லும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.