புதிய அரசியலமைப்பு – நெருக்கடியில் சிக்கிய சுதந்திர கட்சி..!
சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமையால், பழைய அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிக்கு அறிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
கட்சியின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை பழைய அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் நகல் ஒன்றை நிமல் சிறிபால டி சில்வா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதனை கருத்திற்கொண்டே ஆணைக்குழு இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியில் அவர்கள் வகித்த முன்னைய பதவிகளை மீளப்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டமைக்காக நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஐவர் சுதந்திரக் கட்சியில் அதுவரை வகித்து பதவிகளை விட்டும் நீக்கப்பட்டனர். அவர்களின் கட்சி அங்கத்துவமும் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.