News

இலங்கையில் வங்கிக் கட்டமைப்பு பாதிக்கப்படும் அபாயம்!

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தோல்வியா அல்லது சித்தியா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கு தேர்தலை நடத்த வேண்டும். தற்போதைய முன்னேற்றம் தற்காலிகமானதே சர்வதேச கடன்களை மாத்திரம் மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் ஊடாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது திறைசேரி உண்டியல்களை பெற்றவர்கள், திறைசேரி பிணைமுறியங்களை கொள்வனவு செய்தவர்கள் பாதிக்கப்படுவதுடன், வங்கி கட்டமைப்பு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன நிதி நிலைமையில் பாதிக்கப்படும்.

ஆகவே தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான செயற்திட்டங்களை ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். இருப்பினும் அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு எமது யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ராஜபக்சர்களன்  இரண்டு ஆண்டுகால நிர்வாகத்தில் 12 சதவீதமாக காணப்பட்ட ஏழ்மை நிலை 26 சதவீதமாக சடுதியாக அதிகரித்துள்ளது.

மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சர்வதேச மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ள நிலையில் 22 இலட்ச குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அஸ்வெசும செயற்திட்டம் தொடர்பில் ஆளும் தரப்பினர் பல குறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தனது அரசியல் தேவைக்காக சமுர்த்தி நிவாரண வழங்கலை பயன்படுத்திக் கொண்டார். நடுத்தர மக்களை ஏழ்மை நிலைக்கு தள்ளி அதனூடாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் ராஜபக்சர்களின் அரசியலை மக்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button