இலங்கையில் இந்திய பாணியில் புதிய அடையாள அட்டை
இலங்கையில் தனித்துவமான முறையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை கூட்டு ஒப்பந்தத்துக்கமைய குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.
இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தனிநபர்களின் சுய விபரங்கள், முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் என்பன மத்திய தரவுக்கட்டமைப்பில் உள்வாங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரஜைகளின் பிறப்புச்சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும், ஏனைய தரவுகளையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பான யோசனை உள்வாங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தாமதங்களையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிப்பதற்கு பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச் செல்லும் வகையில் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.