பதவி விலகல் தொடர்பில் கெஹலியவின் முடிவில் திடீர் மாற்றம்
பதவி விலகுவதற்கான எவ்வித அவசியமும் கிடையாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒன்றில் அண்மையில் ஆற்றிய உரையின் போது தான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியமான மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் கிடைக்கப் பெறாவிட்டால் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் திரைசேரி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின் மருந்து கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீட்டிற்கான உறுதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போதியளவு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான ஒரு பின்னணியில் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் சில ஊடகங்கள் தாம், நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 100 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இந்த மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.