கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மகிழ்ச்சி தகவல்
திரிபோஷா தற்போது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதாக சிறிலங்கா திரிபோஷா நிறுவன தலைவர் தீப்தி குலரத்ன அறிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர், திரிபோஷா உற்பத்திக்கான பிரதான பொருட்களில் ஒன்றான சோளத்தை பெறுவதில் நிதி நெருக்கடி சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் உற்பத்திகள் மட்டுப்பட்டிருந்தன.
அதன் பின்னர் சுகாதார அமைச்சின் தலையீடு மற்றும் நிதியுதவியுடன் திரிபோஷாவின் உற்பத்தி இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதுமாத்திரமல்லாமல், உலக உணவுத் திட்டமும் (WFP) மற்றும் பல தனியார் நிறுவனங்களும் திரிபோஷா உற்பத்தி செய்யும் போது அதற்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களை வழங்க உதவியது.
இதேவேளை, இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கு மக்காச்சோளத்தை வழங்குவதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) உறுதியளித்துள்ளது.
இதன் கீழ் தற்போது எமது நிறுவனம் அதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக இந்த முக்கிய பொருட்களைப் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
பொதுவாக நமது நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படுகிறது.
திரிபோஷா உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் நிதி நெருக்கடி காரணமாகவும் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை மாத்திரமல்லாது, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் சிக்கல்களும் இருந்து வந்தது.
இது தொடர்பாக பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்ட போதும் , அவற்றிக்கான தெளிவான உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
எனவே, இதற்கு தீர்வாக சுகாதார அமைச்சின் ஊடாக அமைச்சரவை பத்திரம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு எட்டப்பட்டது.
ஆனால் அதற்கும் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கப்படவில்லை என மேலும் அவர் குறிப்பிட்டார்.
சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டால், ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு தி திரிபோஷா வழங்கக்கூடிய திறன் திரிபோஷா நிறுவனத்திற்கு உள்ளது என தீப்தி குலரத்ன தெரிவித்தார்.