தாமரை கோபுரத்திற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொழும்பு – தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் (08.07.2023) நிலவரப்படி தாமரை கோபுரத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
அவர்களில் 18,626 பேர் வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட இலங்கையிலுள்ள தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்), முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 2019ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக சுமார் 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவினால் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தியதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கின்றது.
கொழும்பு – டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்துள்ள இந்த கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடி என அளவிடப்பட்டுள்ளது.
சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான நிர்மாணத்திரனை கொண்ட தாமரை கோபுரத்தினை கண்டு களிப்பதற்கு வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டவர்கள் பலர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.