நாட்டின் சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி: வெளியான முக்கிய காரணம்
நாட்டின் சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. மருந்து தட்டுப்பாடே முக்கியமான பிரச்சினையாகும்.
மறுபுறம் மருந்தின் தரம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளமையால் பிரச்சினைகள் எழுந்துள்ளது.
மேலும், விலை மனு செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை. அவ்வாறு உரிய முறையில் விலை மனு மேற்கொள்ளப்படாமல் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளமையால் மருந்தின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இதேவேளை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும்போது அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், அவை மக்களை சென்றடைவதில்லை.
மனித வளம் தொடர்பிலான பிரச்சினைகள் நான்காவது பிரச்சினையாகும். விசேட வைத்திய நிபுணர்கள் நாளுக்கு நாள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
அத்துடன் வைத்தியசாலைகளில் வைத்திய இயந்திரங்கள் செயற்படுவதில்லை. சுகாதார அமைச்சர் கூறும் விடயங்கள் பொழுதுபோக்கு விடயங்களாக மாறியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.