News

இலங்கையின் கரையோரத்தில் சுற்றுலாத் தளங்களை உருவாக்கும் வேலைத்திட்டம்

இலங்கையின் கரையோரத்தில் சுற்றுலாத் தளங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் | Coastal Area To Be Developed As Tourist Attraction

இலங்கையின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

இதன் போது நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறை உட்பட ஏனைய அரச நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பொருத்தமான முதலீட்டாளர்களை கண்டறிய வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, கடலோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர வள முகாமைத்துவத் திணைக்களமானது ஏற்கனவே நாட்டின் கடற்கரையோரத்தில் 24 புதிய சுற்றுலாத்தளங்களை அடையாளம் கண்டுள்ளது.

ஆற்றங்கரை,  புத்தளம் களப்பு தீவுகள், குடவ, வைக்காலை, நீர்கொழும்பு களப்பு, கபுன்கொட, ப்ரீத்திபுர,  கொக்கல களப்பு, சீதகால்ல, றகவ களப்பு, லுனம களப்பு, மலால லேவாய, கிரிந்த, குனுகலே கடற்கரை, எலிபெண்ட் ரொக், சலதீவ் தீவு, தம்பலகமுவ பே, கவர்னர் ஒப்பிஸ், உப்புவெளி, சாம்பல்தீவு கடற்கரை, ஆர்யமல்ல கடற்கரை, நாயாறு கடற்கரை, நந்திக்கடல் கடற்கரை, சாந்தகுளம் கடற்கரை ஆகிய இடங்களே சுற்றுலாத் தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை மாத்திரமன்றி இன்னும் பல இடங்கள் மேலும் கண்டறியப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

1620 கி.மீ அளவில் பொருளாதார வளங்கள் நிறைந்து காணப்படும் இந்நாட்டின் கரையோர பகுதிகளை பாதுகாத்து, நாட்டின் கடற்கரையோரங்களில் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதனூடாக நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே கடற்கரையோரங்களில் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பாக தினமும் கலந்துரையாடல்கள் நடத்தி அறிக்கைகளை முன்வைக்காமல், ஒரு வேலையையாவது செய்து காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button