மீண்டும் ராஜபக்சக்கள் தலைமையிலான அரசாங்கம் – பெரமுன நம்பிக்கை
இலங்கையில் ராஜபக்சக்கள் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றுவிக்கப்படுமென சிறிலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கட்சியின் உறுப்பினரும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய ராஜபக்சக்கள் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், அவர்கள் தலைமையிலான அரசாங்கம் போராட்டங்களின் மூலம் கடந்த ஆண்டு மாற்றப்பட்டதாக இந்திக அனுருத்த கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனநாயக மக்கள் போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பயங்கரவாத போராட்டமாக மாற்றினர்.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதமரும் தமது கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச மீது பெரும்பான்மை மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில், இலங்கையைில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட்டு, மக்கள் ஆணையுடன் மீண்டும் ராஜபக்சக்கள் ஆட்சி செய்வார்கள்.
பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்த போது சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றார்.
இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியிலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கிறோம்.
அத்துடன், பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சியடைந்ததன் பின்னர் அரசியல் குறித்து அவதானம் செலுத்தலாம்” என்றார்.