இலங்கையிலுள்ள பல நிறுவனங்களுக்கு ஆலோசகர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கென்வில் ஹோல்டிங்க்ஸ் தனியார் நிறுவனம், ஹொட்டேல் டெவலொப்பேர்ஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ லங்கா எரிவாயு ஆகியவற்றுக்கான பரிவர்த்தனை ஆலோசகர்களைத் தெரிவு செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு:
17. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கென்வில் ஹோல்டிங்க்ஸ் (தனியார்) கம்பனி, ஹொட்டேல் டெவலொப்பேர்ஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ லங்கா எரிவாயுக் கம்பனிகளுக்கான கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களைத் தெரிவு செய்தல்
2023.03.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி கம்பனிகளை மீள்கட்டமைப்பு செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்கான கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டித்தன்மையான பெறுகைக் கோரல் முறைமையைப் பின்பற்றி, அக்கறை வெளிப்பாட்டுக் கூற்று (நுழுஐ) மற்றும் முன்மொழிவுக்கான விண்ணப்பங்கள் (RfP) கோரப்பட்டுள்ளன.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் குறுகிய பட்டியல்படுத்தப்பட்ட முன்மொழிவுகளில் தரப்பண்பு மற்றும் செலவுகளின் அடிப்படையிலான தெரிவு செய்யும் பொறிமறைக் கடைப்பிடித்து, மேற்குறிப்பிட்ட 04 நிறுவனங்களுக்கான கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, தெரிவு செய்யப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
I. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் – Alvarez and Marsal
II. கென்வில் ஹோல்டிங்க்ஸ் (தனியார்) கம்பனி – Deloitte India
III. ஹொட்டேல் டெவலொப்பேர்ஸ் லங்கா நிறுவனம் – Colliers Singapore
IV. லிட்ரோ லங்கா எரிவாயுக் கம்பனி – Deloitte India