மீண்டும் வழங்கப்படவுள்ள வாய்ப்பு – அஸ்வெசும தொடர்பில் விசேட அறிவித்தல்
நலன்புரி அரசிலிருந்து தொழில் முனைவோர் அரசை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்றும் “அஸ்வெசும” வேலைத்திட்டத்தின் இறுதி இலக்கு வலுவான தொழில்முனைவோர் வலையமைப்பை உருவாக்குவதே என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
“அஸ்வெசும” வேலைத்திட்டத்தின் இறுதி இலக்கு 2048 ஆம் ஆண்டிற்குள் வறுமையற்ற நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1.2 மில்லியன் மக்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து அவர்களை வலுவூட்டும் திட்டம் இம்மாத இறுதிக்குள் அதிபரிடம் கையளிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், பாடசாலை செல்லும் வயது முதல் முதியோர் வரை பாதுகாத்தல் மற்றும் வலுவூட்டும் வேலைத்திட்டம் இதில் உள்ளடங்கும் என்றும் குறிப்பிட்டார்.
அஸ்வெசும பலன்களைப் பெறுவதற்கான மேன்முறையீட்டுக் கால அவகாசம் கடந்த 10ஆம் திகதி நிறைவடைந்ததாகவும், தகுதியுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதினால் மேலும் அது நீடிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இம்முறை விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு அல்லது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.