இலங்கைக்கான ஐ.எம். எவ் கடனுதவி – அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் முதலாவது மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த மீளாய்வு இடம்பெறும் வரை தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது .
அத்துடன் சர்வதேச நாணய நிதியம் கடந்த மார்ச் மாதம் 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
பல நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த கடனுதவியின் முதலாவது மீளாய்வை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்நோக்க நேரிடுமெனவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்கள் அதிகளவில் ஆராயப்படுமென அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், முதல் மீளாய்வு மேற்கொள்ளப்படும் வரை தற்போதுள்ள எந்த சீர்திருத்தத்தையும் மாற்ற முடியாது எனவும் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதும் கேள்விக்குரிய விடயமாகும்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார நிலை குறுகிய காலத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ளமை நீண்ட கால வலுவூட்டலாக கருதப்படக்கூடாது.
இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணி தற்போது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மேம்படும்.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.