மறுசீரமைக்கப்படும் அரசாங்க நிறுவனங்கள்.
அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பரிவர்த்தனை ஆலோசகர்களை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் , ஹோட்டல் டெவலப்பர்ஸ் சிலோன் லிமிடெட் நிறுவனம், Canwill Holdings மற்றும் Litro Gas Ceylon Limited ஆகிய நிறுவனங்கள் மறுசீரமைப்புச் செய்யப்படவுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்துள்ளதாக அமைச்சரவை தொடர்பான அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மறுசீரமைப்பதற்கான பரிவர்த்தனை ஆலோசகராக அமெரிக்காவை தளமாகக் கொண்ட அல்வரெஸ் & மார்சல் ஹோல்டிங்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் டெவலப்பர்ஸ் சிலோன் லிமிடெட் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான பரிவர்த்தனை ஆலோசகராக சிங்கப்பூரின் கோலியர்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், Canwill Holdings மற்றும் Litro Gas Ceylon Limited ஆகிய இரண்டையும் மறுசீரமைப்பதற்கான பரிவர்த்தனை ஆலோசகர்களாக Deloitte India நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மறுசீரமைப்பு இயக்குநர் ஜெனரல் சுரேஷ் ஷா “இந்த நிபுணத்துவ பரிவர்த்தனை ஆலோசகர்களை நியமிப்பதன் மூலம் திறமையான மற்றும் வெளிப்படையான பங்கு விலக்கல் செயல்முறையை உறுதி செய்ய முடியம் என்று அரசாங்கம் நம்புகிறது.
மேலும், அவர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் இந்த நிறுவனங்களின் வெற்றிகரமான மாற்றத்தை நோக்கி அரசாங்கம் செயல்படவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.