News

வடக்கு, கிழக்கிற்காகவே அதிகளவான வெளிநாட்டு கடன் பெறப்பட்டுள்ளது – பந்துல குணவர்தன

இலங்கை பெற்றுக் கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்றைய தினம் (13) இடம் பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்த போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தசாப்தங்களாக ஏனைய பகுதிகளை விடவும் வடபகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை இந்த மாகாணங்களுக்கு கொண்டு வந்தது.

இந்த கடன் மூலம் அனைத்து பாதைகளும் புடரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.

மின்சார விநியோகம், தொலைதொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டு வரப்பட்டன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் பரவல், அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தற்போது வெளிநாட்டு கடனுக்கான தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான நிதி இல்லை.

ஜனாதிபதி, மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் இணைந்து கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம் பெறுகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாத அளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாண தொடர்ந்து சேவை நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பிக்கப்படும்.

நல்லூர் ஆலய திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்களின் நலன் கருதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவு நேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக பதுளை ஓடிசி, சீதாவாகை ஓ டி சி போன்று யாழ்ப்பாணம் ஓடிசி தொடருந்து சேவை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

அதேநேரம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 32 பேருந்துகளுக்கும் அவசியமான பணியாளர்களை ஈடுபடுத்தி, இந்த கடனை செலுத்தக் கூடிய வகையில் இலாபமீட்டும் பேருந்து சாலையாக அனைத்து பேருந்து சாலைகளையும் மாற்றும் பொறுப்பை மக்கள் நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button