குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே அடுக்குமாடி குடியிருப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களை தொடர்மாடிகளில் குடியமர்த்துவது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் மீளாய்வு கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதற்கான நிதி உதவியை ஆசிய உட்கட்டமைப்பு பொது வசதிகள் அபிவிருத்தி வங்கி வழங்கும்.
கொழும்பகே மாவத்தை, ஸ்டேடியம்கம, ஆப்பிள்வத்த, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர, மாதம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் தொகுதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த வீடுகளில் ஒன்று 550 சதுர அடியில் இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வீடு மற்றும் சொத்துக்கான உரிமைப்பத்திரம், இலவச தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு, வருமான இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்புக்கான உதவித்தொகை, நிதி மற்றும் இதர உதவித்தொகைகள் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்க்கும் மக்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை தொடர்வதற்கென குடியிருப்புகளுக்கு அண்மையில் சிறிது இடம் வழங்கப்பட வேண்டும். அப்படி இடங்கள் வழங்கப்படவில்லையென்றால், மக்கள் அனாதரவாக இருப்பார்கள்.
பயிற்சித் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் போன்றவற்றை மக்களுக்காக நடைமுறைப்படுத்துவதுடன், திட்டத்தின் தோல்வியுற்ற பகுதிகளை அடையாளம் காண வேண்டும். அதற்காக கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை இந்த ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் நியமிக்க வேண்டும்.
அமைச்சு அதிகாரிகள் குழுவுடன் தொடர்ந்து கலந்தாலோசித்து அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை அவர்களிடம் பரிந்துரைத்து, தீர்வு காண வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.