சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கையின் புதிய உத்தி
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான ‘இலங்கைக்கு விஜயம் – Visit Sri Lanka’ எதிர்வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நேற்று (23) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர், வருடாந்தம் சுமார் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறனை இலங்கை கொண்டுள்ளது என்று இந்தியாவின் மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அவர்களில் பெரும்பாலோர் ஆசிய மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாக இருப்பார்கள்.
உலகளாவிய சுற்றுலாச் சந்தையில் போட்டியிடுவதற்கு இலங்கையின் சுற்றுலாத்துறையில் மாற்றம் தேவை” – என்றார்.
பன்முகத்தன்மை கொண்ட வெப்பமண்டல நாடான இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், நாட்டில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியில் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவதில் சமையல் துறை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.