News

இலங்கையில் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சட்டம்

இலங்கையில் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சட்டம் | New Rule From January In Sri Lanka

இலங்கையில் டிமெரிட் புள்ளி முறையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே திசையில் என்ற தொனிப்பொருளில் நேற்று(25.07.2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களை தடுப்பதற்கும், சாரதிகள் செய்யும் தவறுகளை கண்டறிந்து அபராதம் செலுத்தும் முறைமையான டிமெரிட் புள்ளி முறை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான அவதானிப்புகளுக்காக 5000 நவீன தொழிநுட்ப பெட்டிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இந்த நடைமுறையின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளியாக 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பெற்றுக்கொள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏழு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள மோட்டார் போக்குவரத்து சட்டத்தை புதுப்பித்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள 50 மின்சார பேருந்துகளை சேவையில் இணைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மோட்டார் வாகனங்கள் திணைக்களம் மற்றும் தேசிய சாலை பாதுகாப்பு ஆணைக்குழு இணைந்து புதிய வேக வரம்பு ஒழுங்குமுறையை நிறுவும் என்றும் நம்பப்படுகிறது.

அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகள் வேகமாக அதிகரித்து வருவதால், அந்த விபத்துகளைத் தடுக்கும் வகையில் வேக வரம்பு கொள்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். மோட்டார் வாகனங்கள் திணைக்களம் மற்றும் தேசிய வீதி பாதுகாப்பு சபை என்பன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தயாரித்து வருகின்றன.

நகர்ப்புற எல்லைக்குள் மற்றும் கிராமப்புற எல்லைக்குள் வாகனம் ஓட்டக்கூடிய அதிகபட்ச வேக வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் வேகத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வீதியில் வேக வரம்பு குறிக்கப்படும். இதற்கான முன்னோடி திட்டம் ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் இயங்கி வருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button